கர்நாடகாவில் மு.க ஸ்டாலினுக்கு அவமரியாதை: செல்லூர் ராஜூ வருத்தம்!

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காதது உண்மையிலேயே சங்கடமாக உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்திதான் ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுக்க உள்ளோம். இது ஒன்றும் புதிது அல்ல. நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது திமுக ஒன்றும் இல்லாததற்கு எல்லாம் ஆளுநரிடம் மனு கொடுத்து விளம்பரம் தேடியது. அவர்களுடன் பக்க வாத்தியங்களாக இருந்த கூட்டணி கட்சிகள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொன்னார்கள். இன்று கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 22 பேர் பலியாகி இருக்கிறார்கள். பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைக் கண்டித்து எந்த கூட்டணி கட்சிகளும் ஆளுநரை சந்திக்கவோ மனு கொடுக்கவோ.. அறிக்கை கொடுக்கவோ முன்வராததது வருத்தத்திற்கு உரியது.

2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி திமுக ஊழல் செய்து இருக்கிறது. நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனே சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி 30 ஆயிரம் கோடியை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என தவித்துக் கொண்டு இருப்பதாக பேசிய ஆடியோ வெளியில் வந்துள்ளது. இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி வெளிச்சம் போட்டு காட்டினார். தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் தான் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற 3 மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு திடு திப்பென்று செய்தார்கள்.கால அவகசாம் கொடுத்து செய்வதற்கும் திடு திப்பென்று அறிவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே மத்திய அரசு இதை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். திமுகவின் மதுரை மாவட்ட நிர்வாகி வாளை வைத்து பிறந்த நாள் கொண்டாடியது பற்றி கேட்கிறீர்கள். பொதுவாக வாளை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட வேண்டும், எங்கள் ஆட்சியில் போடப்பட்டது. தற்போதைய திமுக என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பார்ப்போம். இதன் மூலம் திமுக ஒரு ரவுடி கட்சி, ஆபத்தான கட்சி என்பதை அவர்களே நிரூபிக்கும் வண்ணம் செய்து வருகிறார்கள். மக்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் உள்ளது. எனவே தமிழக அரசு உண்மையிலேயே ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்கிறது என்றால் உடனடியாக அவர்கள் உரிய வழக்கு தொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒரு வேடிக்கை நடந்துள்ளது. நமது முதல்வருக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முதல்வருக்கே இந்த மாதிரி நடந்தது.. கர்நாடக அரசு தமிழகத்தை எந்த அளவுக்கு புறக்கணிக்கிறது என்பதை காட்டுகிறது. எங்க முதல்வருக்கு இப்படி ஒரு அவமரியாதை நடந்ததை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் திமுக தலைவர் மட்டும் அல்ல.. தமிழகத்தின் முதல்வர்.. 8 கோடி மக்களின் பிரதிநிதியாக போயிருக்கிறார். அவருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காதது உண்மையிலேயே சங்கடமாக உள்ளது. திமுகவினருக்கு இருக்கிறதோ இல்லையே எங்களுக்கு சங்கடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.