தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் எஸ்.டி.ஆர். 48 படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் கெரியரிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படம் எஸ்.டி.ஆர். 48 ஆகும்.
வரலாற்று படமாக உருவாகவிருக்கும் எஸ்.டி.ஆர். 48 படத்திற்காக தாய்லாந்துக்கு சென்று தற்காப்பு கலை கற்று வந்தார் சிம்பு. இதையடுத்து வீட்டில் சும்மா இருக்காமல் லண்டனுக்கு சென்று ஹெவி ஒர்க்அவுட் செய்து வருகிறாராம். கமல் ஹாசன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற ஏற்கனவே களத்தில் குதித்துவிட்டார் சிம்பு.
எஸ்.டி.ஆர். 48 பற்றி தேசிங்கு பெரியசாமி கூறுகையில், இது ஒரு வரலாற்று படம். அனைத்து வயது ஆடியன்ஸுக்கும் பிடிக்கும். படத்தில் நிறைய மாஸ் காட்சிகள் இருக்கிறது. இதில் எஸ்.டி.ஆரின் இன்னொரு பக்கத்தை பார்ப்பீர்கள். இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் படப்பிடிப்பை துவங்க நேரம் தேவை என்றார்.
சிம்பு பற்றி தேசிங்கு பெரியசாமி கூறியதாவது, மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. அவரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த ஸ்க்ரிப்ட் இருக்கிறது. ஒரு சில இயக்குநர்கள் தான் சிம்புவின் முழுத் திறமையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த படம் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும். சிம்பு தற்போது லண்டனில் பயங்கரமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார் என்றார்.
எஸ்.டி.ஆர். 48 படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்தாகவும், அவர் ரூ. 30 கோடி கேட்டதால் வேண்டாம் என்றதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தேசிங்கு பெரியசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நாங்கள் தீபிகா படுகோனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யவில்லை. நடிகர், நடிகைகளை இன்னும் உறுதி தெய்யவில்லை. இது தொடர்பாக வரும் வதந்திகளை பார்த்து என்ஜாய் பண்ணுகிறேன். எந்த நடிகையையும் நாங்கள் தேர்வு செய்யவில்லை என்றார்.
3 ஆண்டுகள் உங்களிடம் இருந்து எந்த படமும் இல்லையே என கேட்டதற்கு தேசிங்கு பெரியசாமி கூறியதாவது, என் முதல் படத்துடன் தொடர்பில்லாத ஒரு புது ஜானரில் படம் இயக்க விரும்பினேன். என்னிடம் முழு ஸ்க்ரிப்ட் இல்லை. ஒன்லைனருடன் யாரையும் தொடர்புகொள்ள விரும்பவில்லை. எனக்கு 4 முதல் 5 ஐடியாக்கள் இருந்தன. ஆனால் இந்த பட ஐடியா தான் சரிபட்டு வரும் என தோன்றியது. அப்பொழுது தான் கமல் சாரை தொடர்பு கொண்டேன். அவரின் குழு விக்ரமை எப்படி கையாண்டது என்பது எங்களுக்கு தெரியும். அவரின் குழுவின் முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.