டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் டெல்லி சென்றுள்ள அவர், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று அவர் சந்தித்தார். கார்கே வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஐக்கிய ஜனதாதள தலைவர் லாலன் சிங் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அத்துடன் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களையும் விவாதித்தனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளை இணைத்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விரைவில் கூட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான இடம் மற்றும் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
நிதிஷ்குமாருடனான சந்திப்பு குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், ‘இனி நாடு ஒன்றுபடும். ஜனநாயகத்தின் பலமே நமது செய்தி. ராகுல் காந்தியும் நானும் இன்று (நேற்று) பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்து, நாட்டுக்கு புதிய திசையை வழங்கும் செயல்முறையை முன்னெடுத்தோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.