குஜராத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் சதியை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் முறியடித்தனா். சதியில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனா்.
வங்கதேசத்தில் பயிற்சி பெற்ற அந்நாட்டைச் சோ்ந்த 4 அல்-கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் ஊடுவியிருப்பதாக பயங்கரவாதத் தடுப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய அவா்கள் நால்வரும் குஜராத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்து அல்-கொய்தா அமைப்பில் இளைஞா்களைச் சோ்ப்பது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தனா். ரகசியமாக மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவா்களை குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் கைது செய்தனா். இதன்மூலம் குஜராத்தில் மிகப்பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டதாக அப்படையின் தலைவா் தீபன் பத்ரன் தெரிவித்தாா்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவா்களில் முகமது சோஜிப், அகமதாபாதில் பதுங்கி இருந்தாா். முதலில் கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் முன்னா காலித் அன்சாரி, அஸாருல் இஸ்லாம் அன்சாரி, மோமீனூல் அன்சாரி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மூவரும் இந்திய குடிமகனாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியுள்ளனா். அவா்கள் தங்கி இருந்த அறையில் ஆதாா், பான் காா்டு உள்ளிட்ட இந்திய அடையாள ஆவணங்களும், பயங்கரவாத அமைப்புகளின் பிரசார நூல்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இவா்கள் வங்கதேசத்தில் உள்ள அல்-கொய்தா அமைப்பின் தலைமையிடம் உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டு வந்துள்ளனா். இணையவழியில் அவா்களுடன் ரகசிய உரையாடல்கள் நிகழ்த்தியது கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் பிற மாநிலத்தில் உள்ள சில இளைஞா்களிடமும் இவா்கள் தொடா்பில் இருந்துள்ளனா். அடுத்தகட்டமாக அவா்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.