காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அரியானா மாநிலம், முர்தால் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து அம்பாலா நகருக்கு லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கலந்துரையாடிய படி ராகுல் காந்தி பயணம் செய்தார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியளார்கள் படும் துயரங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது திட்டமிட்ட ஒரு பயணம் இல்லை. திடீரென்று ஏற்பட்ட பயணம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது, நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். அதேபோல், டெல்லியில் உள்ள சந்தை பகுதிகளுக்கு சென்று மக்களோடு இணைந்து சாலையோர உணவு சாப்பிட்டது, டெல்லி பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுடன் இணைந்து உரையாடியது என சமீபகாலமாக அடிக்கடி பல்வேறு தரப்பு மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து உரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.