இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்

ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் குடிநீரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின் நிறுவனம் 36 லட்சம் லிட்டர் பாலைதான் கொள்முதல் செய்கிறது. இந்த பாலை கொண்டு 2க்கும் அதிகமான வகையில் பால் பாட்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு அவை பொதுமக்களிடம் விநியோகத்திற்கு வழங்கப்படுகின்றன. அதேபோல இது தவிர நெய், ஐஸ்கிரீம், பால்கோவா, தயிர் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆவின் சார்பாக குடிநீர் விநியோகிக்கப்படும் என்று ஆவடி நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் இது தொடர்பான அறிவிப்பு ஏதும் பெரியதாக வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது புதியதாக துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ், ஆவின் குடிநீர் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஒப்பந்த புள்ளிகளும் வெளியாகின. முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் அரை லிட்டர், ஒரு லிட்டர் என சுமார் 1 லட்சம் வாட்டர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது. பின்னர் இது மக்களிடம் பெரும் வரவேற்பையடுத்து இந்த விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாட்டில்கள் ஆவின் விற்பனை நிலையங்களில் விற்கப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் ஒப்பந்தம் பெறும் குடிநீர் ஆலைகள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு அம்மா குடிநீர் என குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இது கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் இந்த குடிநீருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனாலும் சில அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. குடிமக்கள் அனைவரும் தண்ணீர் விநியோகிக்கும் சேவையில் ஏற்பட்டுள்ள தோல்விதான் தண்ணீர் விற்பனை ஆவதற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தற்போது ஆவின் சார்பில் குடிநீர் விநியோகிக்கும் முடிவுக்கும் தேமுதிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வரியும் பெற்று கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் ஆவின் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஆவினின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு செய்யாமல் குடிநீரை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம். குடிநீருக்காக பொதுமக்கள் வரி செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

முறையாக குடிநீர் வரி செலுத்தி வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர, அதனை விற்பனை செய்ய திட்டமிடுவது எந்த வகையில் நியாயம். அதிமுக ஆட்சியில் அம்மா குடிநீர் விற்பனை செய்த போது தேமுதிக அதை கண்டித்தது. தற்போது ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்கும் திட்டத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.