வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம், சிபிஐ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக ஆகிய 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம். சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக, அனைத்து விதித்திலும் தொடர்ந்து போராடுவோம். எங்கள் செய்தியை நாட்டு மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி மறுத்துவிட்டது. எனினும், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அக்கட்சி தனியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் உணர்வை குறிக்கிறது. பழைய கட்டிடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 28-ம் தேதி புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.