புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும் செங்கோல்: அமித் ஷா!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பாக செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வரும் மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்றக் கட்டிடத்தை, நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், வரும் 28ஆம் தேதி, சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பாஜக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளார். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆகஸ்ட் 14, 1947 அன்று, சுமார் 11:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுக்கொண்டார். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார். இந்தச் செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்நாட்டு மக்களிடம் அதிகாரம் மாறியதற்கான அடையாளம். இந்தியா, குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. சோழ வம்சத்தின் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். பிரதமர் மோடி இந்த செங்கோலை ஏற்று, அது சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வைக்கப்படும். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும். ஜனநாயக அமைப்பின் மீதான மரியாதையின் அடையாளமாக செங்கோல் நிறுவப்படும் என அமித் ஷா அறிவித்துள்ளார்.