புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது: சீமான்

புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது என சீமான் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக பொறுப்பு கட்சிகள் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது. அதிகாரமும், உயர்ந்த பதவியும் இருப்பதால் சொல்வதை எல்லாம் கேட்கவேண்டும் என்று இல்லை. நாட்டின் பழங்குடி இன மக்களில் இருந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளனர். அவரை ஏன் விழாவிற்கு அழைக்கவில்லை என்று கேட்டால் வேறு வேறு காரணங்கள் சொல்கிறார்கள். இது எல்லாம் பெரிய விஷயமா? என்று கேட்கிறார்கள். பிரதமர் இல்லாமல் நாங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும். இந்தியா என்பது ஜனநாயக நாடு. இந்தியாவின் முதல் குடிமகனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் எப்படி ஜனநாயக நாடாக இருக்கும். இதை எதிர்க்கவேண்டும். ஆகவே மம்தா பானர்ஜி, அகிலேஷ்யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதை எதிர்க்கும் போது அதை வரவேற்க வேண்டும்.

வேறு எந்த மாநிலங்களிலாவது முதல்வர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்களா? கடந்த முறை துபாய், அரபு நாடுகளுக்குச்சென்று தற்போது எவ்வளவு முதலீடுகளை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்? இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்களா? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? வெளிநாடுகளுக்கு செல்வோம் முதலீட்டைக் கொண்டுவருவோம் என ஜெயலலிதா காலத்தில் இருந்து நடைபெற்று வருவது நாடகம் என்று தெரியவில்லையா? ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி தமிழகத்தில் கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எந்தெந்த துறையில் எவ்வளவு கடன்? எதனால் கடன்? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

ஜூன் மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் குறைவதில்லை. எனவே, ஜூன் 15-ந்தேதிக்குப் பிறகு பள்ளிகளை திறக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு துறையையாவது மாற்றிக் கொடுக்கவேண்டும். ஆனால், அதை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களிலும் டாஸ்மாக் இருந்தபோதும் கள்ளுக்கடைகளும் இருக்கிறது. தமிழகத்தில் கள்ளுக்கடைகளை ஏன் திறக்கவில்லை என்றால் இங்கு ஆளும் முதல்வர்களுக்கு பினாமிகள் பெயரில் சாராய ஆலை இருக்கிறது. கள்ளுக்கடைகளை திறந்தால் அவர்களின் லாபம் குறைந்துவிடும். எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை திறப்போம். இவ்வாறு அவர் கூறினார்.