நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதிய வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
“தளபதி” விஜய்யின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “பட்டினி தினத்தை” முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.
இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.