புதிய நாடாளுமன்ற திறப்புக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காதது நவீன தீண்டாமை என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தையும், விழுப்புரத்தில் தலித் மக்களை கோயிலுக்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையும் ஒப்பிட்டு திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். பொதுவாக, நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் ஜனாதிபதி திரெளபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும். ஆனால், இந்த விழாவுக்கு மத்திய அரசு அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ஜனாதிபதி திரெளபதி முர்மு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதன் காரணமாக 19 எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கு நாட்டின் முதல் ஆதிவாசி ஜனாதிபதியான திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அப்படியே தமிழ்நாட்டுக்கு வந்தால், இங்கு விழுப்புரத்தில் தலித் மக்கள் இந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது என ஜாதி இந்து கும்பல் போராட்டம் நடத்துகிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஜாதி அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. ஜாதியால் வழிநடத்தப்படும் இந்த இந்திய சமூகத்தில் நாட்டின் முதல் குடிமகளும், பொதுமக்களும் எதிர்கொள்ளும் அவலம் ஒரே மாதிரியானது தான். எல்லா அரசியல் கட்சிகளுமே இந்து சித்தாந்தத்தை சடங்கு, சம்பிரதாயங்கள் மூலமாக தூக்கிப்பிடித்து வருகின்றன.
பல அரசியல் கட்சிகளும், அரசுகளும் வந்து போயிருக்கின்றன. அவை அனைத்துமே சித்தாந்த பேதமில்லாமல் சடங்கின் புனிதத்தை பாதுகாக்கவே பாடுபடுகிறார்கள். இவ்வாறு அதை பாதுகாப்பதன் மூலம் நவீன தீண்டாமை, ஜாதி பாகுபாட்டையும் அவர்கள் வளர்க்கிறார்கள். தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் செயல்பட்டு வரும் பாஜகவுக்கு கடும் கண்டனங்கள். இவ்வாறு பா. ரஞ்சித் கூறியுள்ளார்.