தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் தமிழகத்தில் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள டுமிங்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு பதிவு செய்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நமக்கு நாமே மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாகவே நடந்துள்ளது. தற்போது சென்னையில் குடிசை பகுதிகளை மையமாக வைத்து மருத்துவ முகாம்கள் நகருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை. இந்த கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய அமைப்பு அங்கு ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாததை காரணம் காட்டி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. இது 30 நிமிடத்தில் சரி செய்யக் கூடிய விஷயம். இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?
நேற்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டார்கள். தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள். இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக மாநில அரசின் உரிமைக்கு எதிராக செயல்படுவது அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுத்தும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அப்போது எல்லா விஷயங்களையும் எடுத்துரைப்போம். இந்த மாதிரி தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.