டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல்: எடப்பாடி பழனிசாமி!

டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல் என்றும், சோதனையோடு விட்டு விடாமல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், மற்றும் அவரது நண்பர் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கையை விட பல நூறு மடங்கு ஊழல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடந்து இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

முறையாக வரி கட்டவில்லை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து என வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறையாக வந்த மத்திய வருமான வரி அதிகாரிகளை கரூரில் திமுகவினர் அடித்து விரட்டியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணம். மாநில அரசு அதிகாரிகளை திமுக குண்டர்கள் தாக்கிய நிலையில் இப்போது மத்திய அரசு அதிகாரிகளும் திமுக குண்டர்களால் தாக்கப்படுகின்றனர். இது குறித்து பேட்டியளித்த கரூர் மாவட்ட எஸ்.பி எங்களிடம் சொல்லாமல் சோதனைக்கு வந்து விட்டார்கள் என கூறுகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் முன் கூட்டியே தெரிவித்து இருந்தால் தக்க பாதுகாப்பு அளித்து இருப்போம் என மாவட்ட எஸ்.பி கூறுகிறார். காவல்துறை திருடர்களை பிடிக்க செல்லும் போது இப்படித்தான் தகவல்களை முன் கூட்டியே தெரிவித்து விட்டு செல்வார்களா. முன்கூட்டியே கூறியிருந்தால் பதுக்கி இருக்கலாம் என ஆட்சியாளர்களுக்கு மட்டும் இல்லை. காவல் அதிகாரிகளுக்கு இருப்பது போல பேட்டி கொடுக்கிறார். மாவட்ட எஸ்.பி, தான் ஒரு அதிகாரி என்பதை மறந்து விட்டு திமுக உறுப்பினர் போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

திருடர்கள், கொள்ளையர்கள் போல் வருமான வரித்துறையினர் இரவில் புகுந்ததாக ஆர்.எஸ். பாரதி சொல்கிறார். தமிழ்நாட்டில் திருடர்களும் கொள்ளையர்களும் இரவில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என ஆர்.எஸ் பாரதி ஒப்புக்கொள்கிறாரா?. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது தனியாரில் சோதனை நடந்தாலும் எங்களை தொடர்புபடுத்தி பேசி வந்தார். ஆனால் தற்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனை குறித்து ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலை விட பலநூறு மடங்கு ஊழல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. சோதனையோடு நின்று விடாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.