டெல்லியில் சிறுமி கொலை: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!

தலைநகர் டெல்லியில் 16 வயதே ஆன சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் மிகவும் கொடூரமான ஒரு படுகொலை சம்பவம் நடந்துள்ளது. அங்கே 16 வயது சிறுமி ஒருவர் இரவு நேரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 20 வயதான அவரது காதலன் சாஹில் என்பவர் அந்த சிறுமியைக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறியுள்ளது. சாஹிலை தீவிரமாகத் தேடி வந்த போலீசார், இன்றைய தினம் அவரை கைது செய்தனர். இந்தப் படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தை அதிர வைத்துள்ளது. அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏதோ சண்டை இருந்துள்ளது. தனது தோழியின் மகன் பர்த் டே பார்ட்டிக்கு அந்த சிறுமி சென்று கொண்டிருந்த போது தான், அவரை சாஹில் வழிமறித்துத் தாக்கியுள்ளான். 30க்கும் மேற்பட்ட முறை அந்த சிறுமியைக் கொடூரமாகக் குத்தி கொலை செய்துள்ளான். அதன் பின்னர் சில நொடிகள் அங்கிருந்த செல்லும் இளைஞர், மீண்டும் அங்கே வந்து ஆத்திரம் தீராமல் அந்த சிறுமியை உதைத்துள்ளான். மேலும், கல்லை எடுத்தும் சிறுமி மீது போட்டுத் தாக்கியுள்ளான். இதில் கொடூரம் என்னவென்றால் இந்தச் சம்பவம் நடக்கும் போது, பலரும் அந்த வழியாகச் செல்கிறார்கள். அதில் ஒருவர் கூட இளைஞரைத் தடுத்து சிறுமியைக் காப்பற்ற துளியும் முயலவில்லை.

இந்த படுகொலை சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், இது குறித்து விளக்கம் கேட்டு டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 48 மணி நேரத்தில் அதற்கு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார், மேலும் குற்றவாளிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அது குறித்து ஸ்வாதி மாலிவால் மேலும் கூறுகையில், “டெல்லியில் 16 வயது சிறுமி 40, 50 முறை கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பல முறை கல்லைக் கொண்டும் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த போது பலர் அந்தப் பக்கம் செல்கிறார்கள். ஆனால், யாருமே சிறுமியைக் காக்க முயலவில்லை. டெல்லி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. மத்திய உள் துறை அமைச்சர், துணை நிலை ஆளுநர், டெல்லி முதல்வர் ஆகியோருடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். டெல்லியில் குற்றவாளிகளுக்குத் தைரியம் அதிகமாகிவிட்டது. இதைப் போன்ற ஒரு கொடூரத்தை இத்தனை ஆண்டுகளில் நான் பார்த்தே இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “டெல்லியில் மைனர் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாக மாறிவிட்டனர். போலீசாரை கண்டு அவர்களுக்குப் பயம் இல்லை. துணை நிலை ஆளுநரே சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பில் இருக்கிறது. தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.