நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசால் நிறுவப்பட்ட செங்கோல் தொடர்பாக புனை கதைகளுக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது 1947-ல் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டு செங்கோல், லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்ப்பட்டது. இந்த செங்கோல் தொடர்பாக பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டன. முதலில் சோழர் காலத்து செங்கோல் என ஒரு கதை சொல்லப்பட்டது. பின்னர் சோழர் காலத்து செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து அதை ஆட்சி மாற்றக் குறியீடாக நேருவிடம் மவுண்ட் பேட்டன் கொடுத்தார் என சொல்லப்பட்டது. இதனால் இந்த செங்கோல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பரப்பிவிடப்பட்டது. மேலும் நேருவிடம் கொடுக்கப்பட்ட இந்த செங்கோலை, அலகாபாத் அருங்காட்சியகத்தில் நேருவின் வாக்கிங் ஸ்டிக் என எழுதி வைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் செங்கோல் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் தொடர்பான புனைகதைகள் ஏராளம். உண்மையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி கராச்சியில் இருந்தார் மவுண்ட்பேட்டன் பிரபு. நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோல் கொடுத்த நிகழ்வில் மவுண்ட்பேட்டன் பிரபு இல்லை. கராச்சி பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பின் நேருவிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார் மவுண்ட்பேட்டன் பிரபு. இவர்கள் சொல்லும்படியான புனை கதைகள் எதுவும் இல்லை. அதேபோல அலகாபாத் அருங்காட்சியகத்தில், செங்கோலுக்கு கீழே நேருவுக்கு கொடுக்கப்பட்ட தங்க கோல் என்றுதான் எழுதப்பட்டிருந்தது. வாக்கிங் ஸ்டிக்கர் என்றெல்லாம் எழுதப்படவில்லை. புனை கதைகளுக்கும் ஒரு அளவு வேண்டாமா? தாம் வந்த பிறகுதான் நாட்டுக்கே சுதந்திரம் கிடைத்தது போல பேசி வருகிறார் பிரதமர் மோடி.
நாட்டுக்காக பதக்கங்கள் பெற்றுத் தந்தவர்கள் மல்யுத்த வீராங்கனைகள். ஆனால் டெல்லியில் மல்யுத்த வீரர்களுடன் போலீசார் மல்யுத்தம் நடத்துகின்றனர். ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொன்டுவருவதற்கு என வழிமுறைகள் இருக்கிறது அல்லவா? அதைவிட்டு விட்டு இப்படியா செய்வார்கள்? இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.