சீமான் உள்பட நாம் தமிழர் நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகளின் டுவிட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து வரும் சீமான் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று சீமானின் டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட மேலும் சில நிர்வாகிகளின் டுவிட்டர் பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் டுவிட்டர் பக்கங்களிலும் கூட, ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றே வருகிறது. இதன்மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்பட முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் முடக்கத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.