இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

80வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜாவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.

இளையராஜா இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன் முகம் கொண்டவர். உண்மையிலேயே இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி தான். அதே நாள் தான் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் மீது இருந்த மதிப்பும் மரியாதையால் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா. அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். கலைஞர் ஐயா தமிழுக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளார். அந்த அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால் கலைஞரை மட்டுமே தமிழக மக்கள் ஜூன் 3ஆம் தேதி வாழ்த்த வேண்டும். அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக பலமுறை தெரிவித்துள்ளார்.

பண்ணைபுரம் என்னும் கிராமப்புறத்தை பிறப்பிடமாக கொண்ட இளையராஜா 14 வயதில், அவர் தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக் குழுவில் சேர்ந்தார். தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகாலமாக இசை ராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இளையராஜாவிற்கு டுவிட்டர் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதனிடையே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இளையராஜாவை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார். மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து அறிஞர் அண்ணாவின் புத்தகத்தை கொடுத்து இளையராஜாவை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்கள் பொன்முடி, கே.என் நேரு உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக இசைஞானி இளையராஜாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா! அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! என்று பதிவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதேபோல் திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்” என முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.