அதானி விவகாரத்தில் பிப்ரவரி மாதம் முதல் பிரதமரிடம் கேட்ட 100 கேள்விகளை காங்கிரஸ் கட்சி புத்தகமாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பெர்க் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதானி குழுமத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் அதானி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியிடம் எழுப்பிய 100 கேள்விகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொறுப்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் போது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோருவோம் என்று கூறினார். மேலும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ஜூன் 12ம் தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.