கருணாநிதி அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர்: முதல்வர் ஸ்டாலின்!

கருணாநிதி அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் அனைத்து துறைகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இது கலைஞரின் நூற்றாண்டு விழா என்பதால், ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார். புகைப்பட கண்காட்சியுடன் கலைஞரின் சாதனைகள் குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பெரியாரின் கொள்கை வாரிசான கலைஞரை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வருகை தந்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்கும் காந்தியடிகளுக்குமான தொடர்பை கோபாலகிருஷ்ண காந்தி நன்கு அறிவார். மதவெறியன் கோட்சேவால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அண்ணாவைப் போல கலைஞரும், காந்தியடிகள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். திராவிட இயக்கம் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் கோபாலகிருஷ்ண காந்தி. திராவிடக் கப்பல் சென்றடைய வேண்டியது கூட்டாட்சித் துறைமுகம் என்றுக் குறிப்பிட்டார் கோபாலகிருஷ்ண காந்தி. மகாத்மா காந்தியின் பேரன் இங்கு வருகை தந்து கருணாநிதி அவர்களையும் என்னையும், இந்த ஆட்சியையும் பாராட்டி பேசியது என் வாழ்நாள் வரம் என்று கூறினார். இந்த பெயரை காப்பாற்றும் வகையில் நான் நடந்து கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

நாளை ஜூன் 3ஆம் நாள். விழுந்து கிடந்த தமிழ் சமுதாயத்தை விடிவெள்ளியாக தோன்றி வாழும் காலத்தில் உதயசூரியனாக வாழ்ந்து மறைந்த பின்னரும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டி வரும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி தோன்றிய நாள். அவரது பிறந்த நாள் என்பதை விட தமிழ் சமுதாயத்திற்கு உயிராக உணர்வாக இருந்தவர் உதயமான நாள் என்றே சொல்ல வேண்டும். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாட திட்டமிட்டுள்ளது. திராவிட மாடல் அரசை அவருக்கும் அவரது புகழுக்கும் காணிக்கையாக அளிக்கிறேன். அவர் அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் அனைத்து துறைகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொது நலனும் தொலை நோக்கு பார்வையும் கொண்டவர் கருணாநிதி. அதனால்தான் அவருக்கு ஐந்து முறை தமிழ்நாட்டினை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 13 சட்டசபை தேர்தலில் நின்று வென்று காட்டியவர் கருணாநிதி. மக்களோடு மக்களாக இருந்தவர். அவர் மக்களின் மனங்களில் ஆட்சி செய்கிறார் இன்றும் வாழ்கிறார். நவீன இந்தியாவின் சிற்பியாக திகழ்கிறார். முதல்வருக்கெல்லாம் முதல்வராக திகழ்ந்த கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.