கோரமண்டல் ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக குழு!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா விரைகின்றனர். தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியதில் 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் என்பதால் இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் அதிகளில் இருக்க வாய்ப்பு உள்ளது. முன்பதிவு பெட்டியில் பயணித்தோர், முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்தோர் என மொத்தம் எத்தனை தமிழர்கள் ரயிலில் பயணித்தனர். அவர்களின் நிலை குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

853 பேர் தமிழ்நாட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரம் தெரியவரவில்லை. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் மாநில அரசு கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் காலை 8.15 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளார். தெற்கு ரயில்வே சார்பில் சென்னை செண்ட்ரல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் காலை 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள், சிறப்பு மருத்துவக் குழு ஒடிசாவுக்கு இன்று காலை 9 மணியளிவில் விமானம் மூலம் செல்கின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 233ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் சடலங்கள் குவியல் குவியலாக கிடக்கும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கியுள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசா மாநில அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மேலும் இன்று கறுப்பு நாளாகவும் அறிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்காக ஏராளமான இளைஞர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.