விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்தை ஒட்டி சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரயில் விபத்து தொடர்பாக முழு விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். 2 மாவட்ட வருவாய் அலுவலர், 2 துணை ஆட்சியர், 4 தாசில்தார் கொண்ட அதிகாரிகள் குழுவும் ஒடிசா சென்றுள்ளது. இதுவரை 8 பேர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். நாங்கள் கோரமண்டல் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா விரைவு ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளோம். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தமிழகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.