மாநிலங்களுக்கு தனியாக கலாச்சாரம் எல்லாம் இல்லை: ஆளுநர் ரவி

மாநிலத்திற்கு எல்லாம் தனியாகக் கலாச்சாரம் இல்லை. இந்த கற்பனை அடையாளங்கள் நமது நாட்டின் வலிமையைக் குறைக்கிறது என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்

தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, மாநிலங்களின் கலாச்சாரங்கள் குறித்துப் பேசியிருந்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியதாவது:-

இப்போது சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க உலக நாடுகளை இந்தியாவை எதிர்நோக்குகின்றன. இந்தியாவால் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இப்போது கூட நாம் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். இப்போது உலகம் பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் பங்கு உதவியாகவே இருக்கும். நமது குழந்தைகளுக்குப் பாரதம் என்றால் என்ன என யாருமே சொல்லித் தருவதில்லை. நமது நாட்டில் படையெடுப்புகளுக்கு முன் பல மன்னர்கள் இருந்தனர். பாரதம் பலரது ஆட்சியின் கீழ் இருந்தது. அதேநேரம் ஒரே சமூகமாக ஒற்றுமையாக இருந்தோம். வேறு இடங்களுக்குச் செல்கிறோம் என்ற எண்ணம் யாருக்குமே இருந்தது இல்லை. ஏனென்றால் அப்போது ஒரே கலாச்சாரம் நமது அனைவரையும் இணைத்தது. சிவன், கிருஷ்ணர், தேவி கடவுளை அனைவரும் பிரார்த்தனை செய்தனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. கலாச்சாரம் முழுமையாக மாறிவிட்டது. ஒரு மாநிலத்திற்குள்ளேயே பல கலாச்சாரங்கள் இருக்கிறது. 50, 100 கிமீ தூரத்திற்கு எல்லாம் தனித் தனி கலாச்சாரம் என்கிறார்கள்.

இந்தியாவில் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே உருவாக்கினர். ஆனால், இப்போது அதை அரசியல் அடையாளங்களாக மாற்றியுள்ளனர். மாநிலங்களுக்குத் தனி அடையாளம் என்பது மக்களைப் பிரிக்கும் மனநிலையை உருவாக்கும். தமிழர்கள், தெலுங்கர்கள் போன்ற அடையாளங்களை உருவாகியுள்ளன. இது ஒரே பாரதம் என்பதற்கு எதிரானது. பாரதம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டோம். மாநிலத்திற்கு எல்லாம் தனியாகக் கலாச்சாரம் இல்லை. இந்த கற்பனை அடையாளங்கள் நமது நாட்டின் வலிமையைக் குறைக்கிறது. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை உருவாக்கப்பட்டது. அதேபோல ஜார்கண்ட் பீகாரில் இருந்தும், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் இருந்தும், சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் உருவாக்கப்பட்டன. தெலங்கானாவும் ஆந்திராவில் இருந்து இப்படி தான் உருவாக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காகவே முதலில் மாநிலத்தைப் பிரித்தார்கள். ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக மொழி வாரியாக இது இருந்தது. இப்போதும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களை வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியும். அனைவரும் இந்தியர்கள் தான். அப்படிப் பார்ப்பதே சரியானதுஇவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.