ஒடிசா ரயில் விபத்துக்கு கூட 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் தான் காரணம் என எளிதாக பழிபோடக் கூடியது பாஜக என, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நியூயார்க் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது:-
நீங்கள் பாஜகவிடம் எதனை கேட்டாலும் அதனை கடந்து செல்லக் கூடியதாக பார்க்க முடியும். ஒடிசா ரயில் விபத்து குறித்து பாஜகவினரிடம் கேள்வி கேளுங்கள்.. 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் மீது பழிபோடுவார்கள். பாஜகவினரிடம் இருக்கும் உடனடியான ஒரு பதில் என்ன தெரியுமா? வரலாற்றை பாருங்கள் என்பதுதான். பாஜக, ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே மற்றவர்கள் மீது பழிபோடுகிற போக்கைக் கொண்டவை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்தால் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவர். தார்மீகப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலகுவதுதான் முறையானது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன; அதற்காக ஆங்கிலேயர் ஆட்சிதான் காரணம் என கூறி காங்கிரஸ் அரசு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி யாராக இருந்தாலும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலங்களையே குறை சொல்வது வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னொருவர் மீது பழிபோட்டுவிட்டு தப்பிப்பதையே வழக்கமாகவும் கொண்டுள்ளனர். நவீன இந்தியாவை உருவாக்கியதில் என்.ஆர்.ஐ.-க்கள் பங்கு முக்கியமானது. மகாத்மா காந்தி ஒரு என்.ஆர்.ஐ.தான். நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் என்.ஆர்.ஐ.கள்தான். பல்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருந்த போதும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இதனைத்தான் இந்திய சமூகத்திடமும் நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.