மனைவி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்: அபிஷேக் பானர்ஜி கண்டனம்!

வெளிநாடு செல்ல முயன்ற மனைவியை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள், தலைவர்கள் மீது மத்திய விசாரணை ஏஜென்சிகள் பல்வேறு வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளில் ஒன்று நிலக்கரி ஊழல் வழக்கு. மமதாவின் உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏற்கனவே அபிஷேக் பானர்ஜி, ருஜிரா பானர்ஜியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ருஜிரா பானர்ஜி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துபாய் செல்ல இருந்த ருஜிரா பானர்ஜியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்துக்கு அபிஷேக் பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடிக்கு நான் வெளிப்படையாகவே கூறுவது என்னவென்றால் என்னுடன் அரசியல் ரீதியாக மோதுங்கள்.. என் மனைவி மற்றும் 9 வயது மகள், 3 வயது மகனுடன் மோத வேண்டாம். அரசியல் ரீதியாக என்னுடன் மோதுங்கள். நீரவ் மோடி, சோக்ஸி இவர்கள் எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓடும்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நாட்டின் இன்சூரன்ஸ் நிறுவன பணத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பணத்தையும் அதானி சூறையாடியது குறித்து விசாரணை நடந்ததா? எனவும் கேள்வி எழுப்பினார்.