மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குக்கி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறையான ஒரு சூழலே நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படும் போதிலும் அவை பெரியளவில் பயன் தருவதாக இல்லை. கடந்த ஒரு மாதமாகவே அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அங்கே சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அங்கே ஏற்கனவே இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த சூழலில், நிலைமை, அங்கே இன்னும் அமைதி திரும்பாத சூழலில் வரும் ஜூன் 10ஆம் தேதி வரை இணையச் சேவை முடக்கம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மணிப்பூரில் நடந்த ஒரு கொடூரம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மணிப்பூரில் லாம்சாங் பகுதியை அடுத்துள்ள ஐரோசெம்பா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதாவது மூன்று பேரை ஏற்றிக்கொண்டு ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸ் மற்றும் மாருதி ஜிப்சி ஆகிய வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரிய குழு ஒன்று அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அவர்கள் யார் என விசாரித்த அந்த கும்பல், அப்படியே 3 பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளது. இதில் வெறும் 8 வயதே ஆன சிறுமியையும் இப்படி கொடூரமாகக் கொன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த கும்பல் ஆம்புலன்சை எரித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஜூன் 4ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
முன்னதாக ஜூன் 4ஆம் தேதி அதிகாலையில், இந்தியத் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரஞ்சித்தின் வீடு உட்பட, கக்சிங் மாவட்டம் சுக்னு என்ற பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் எம்எல்ஏ வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சம்பலானது. அதேபோல ஜூன் 3ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ என 4 பேரை சுக்னு பஜார் காங்கிரஸ் கட்டிடத்தில் உள்ளூர் மக்களே பிடித்து வைத்திருந்தனர். அவர்களை சில மணி நேரம் கழித்தே மக்கள் விட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெறுவதால் அங்கே பதற்றமான ஒரு சூழலே உருவாகியுள்ளது. அங்குப் பாதுகாப்பிற்காக சுமார் 10,000க்கும் மேற்பட்ட அசாம் ரைபிள் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அங்கே அமைதி திரும்புவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை.