மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று சந்தித்து பேசினர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் அத்துமீறல் புகார் செய்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடியவர் என்ற காரணத்தால் பிரிஜ் பூஷண் மீது மத்திய அரசு கைவைக்கவில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போனது. உச்சநீதிமன்றம் கடுமை காட்டிய பின் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது. ஆனால் பிரிஜ் பூஷண் கைது செய்யப்படவில்லை. ஏற்கனவே டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாத கால போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை திறப்பு விழாவின் போது முற்றுகையிட்டு போராட சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட நாடு கொந்தளித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென, மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரை சந்தித்து பேசினர். மல்யுத்த வீரர்கள் சார்பாக பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராத் தாக்கூருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.