ஜூன் 23ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூன் 12ல் நடக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமாக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பீகார் முதல்வரான நிதிஷ் குமார் ஏற்பாடு செய்தார். இதையடுத்து ஜூன் 12ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் மேட்டூர் அணையில் அன்றைய தினம் நீர்திறக்கும் விழாவில் பங்கேற்க உள்ளார். இதனால் மாற்று தேதியில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று ஜூன் 12ல் நடைபெற இருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஒத்திவைக்கப்பட்ட இந்த கூட்டம் ஜூன் 23ல் நடைபெறும் என நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23ல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான டி ராஜா, சீதாராம் யெச்சூரி மற்றும் திபன்கார் பட்டாச்சாரியா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.