மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம்: பொன்முடி

தமிழகம் முழுவதும் பட்டப்படிப்பை முடித்த சுமார் 9.20 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள்தான் வேந்தர்களாக இருக்கிறார்கள். எனவே, ஆளுநர்கள்தான் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த சூழலில், திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இன்னும் பட்டம் வழங்கவில்லை. பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் உயர்படிப்பில் சேர்வதற்கும், பணியில் சேர்வதற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-

பட்டமளிப்பு விழாவை நடத்த தமிழக அரசும், உயர்கல்வித்துறையும் தயாராகவே உள்ளது. இதை ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பல முறை தெரிவித்துவிட்டோம். ஆனால், ஆளுநர் ரவி இதற்கு அனுமதி அளிக்க தாமதம் செய்கிறார். பட்டமளிப்பு விழாவை தமிழக முதல்வரையோ அல்லது அமைச்சர்களையோ அழைத்து கூட ஏற்பாடு செய்யலாம். ஆனால், வட இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைக்க ஆளுநர் விரும்புகிறார். அதனால்தான் இதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆளுநருக்கு தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுக்கும் போதிலும், பட்டமளிப்பு விழாவுக்கு தாமதம் அவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை பெற முடியாமல் உள்ளனர். வேண்டுமென்றே இந்த விஷயத்தில் ஆளுநர் காலத்தாமதம் செய்வதால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொன்முடி கூறினார்.