வேலூரில் நடைபெற்ற 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று முதல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றார்.
வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் விகே சிங், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை உள்ளிட்ட தமிழக பாஜகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார் என்றதுமே முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. சேலத்தில் அவருக்குக் காய்ச்சல் ஜுரம் தொடங்கிவிட்டது. அதனால் தான் 9 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார். முதலமைச்சரே அதைச் சொல்வதற்குத் தான் இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அமித்ஷா வரும் போது நீங்கள் லைட்டை வேண்டுமானால் ஆஃப் செய்யலாம். ஆனால் பாஜக தொண்டர்களின் எழுச்சியை நிறுத்த முடியாது. 2024 பாராளுமன்றத் தேர்தலில், இன்று காலை அமித் ஷா சொன்னது போல என்.டி.ஏ கூட்டணியிலிருந்து 25 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் ஆசீர்வாதத்தோடு புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள். 9 ஆண்டுகாலத்தில் நாங்கள் செய்த சாதனைகளை உள்துறை அமைச்சர் சொல்வார்.
10 ஆண்டு காலம் திமுக யுபிஏ கூட்டணியில் இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள் என்று நானே சொல்கிறேன். முதல்வர் ஸ்டாலினின் காதில் கேட்கும் அளவுக்கு நான் கத்திச் சொல்கிறேன். திட்டம் போட்டு விவசாயிகளை அழிப்பதற்காக டெல்டா பகுதியான தஞ்சாவூரில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் தான் நீங்கள் செய்த முதல் சாதனை. டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் வளம் ஒழிப்பதற்காக சேது சமுத்திர திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். 2ஜி ஊழல் செய்து, விஞ்ஞான முறையில் எப்படி ஊழல் செய்யலாம் என உலகிற்கு ஊழல் திட்டத்தை அறிமுகப்படுத்தினீர்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கும் போது ஒரு லட்சம் பேரை கொன்று குவித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஏர் கூலர் முன் அமர்ந்து உங்கள் குடும்பத்திற்கு எப்படி கேபினட் மந்திரிகளை வாங்க வேண்டுமென்று டெல்லிக்கு ஓடிக் கொண்டிருந்தீர்கள். தொடர் மின்வெட்டு திட்டம், மருத்துவ படிப்பு சீட்டை ஏழை மக்களுக்கு கொடுக்காமல், பணக்காரர்களுக்கு மட்டும் கொடுக்கும்படியான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.
வெளிநாட்டிலிருந்து முதலமைச்சரே சட்ட விரோதமாக ஹம்மர் காரை இறக்குமதி செய்து புதிய திட்டம் செய்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் மீது சிபிஐ வழக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிப்பதற்காக கூட 2011ல் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். ரெட் ஜெயண்ட் மூவீஸ், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன், மோகனா மூவிஸ் என தமிழர்களின் கலை தாகத்தை தீர்க்க கலை திட்டம் கொண்டு வந்தீர்கள். இதெல்லாம் தான் உங்கள் சாதனையே தவிர, நீங்கள் செய்த அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேதனை மட்டும்தான். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.