தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமித்ஷா பாஜகவினர் மத்தியில் பேசியது குறித்து ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார். ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவின் நலனை பாதிக்காத வகையில் தான் முடிவு எடுப்போம்” என்று கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பேசினார். இது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தென்சென்னை என்று சொன்னால் ஏற்கனவே அதிமுக போட்டியிட்ட தொகுதி. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படியில் அவர்கள் பயணம் உள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் ஆலோசனைக் கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார்கள். தேர்தலில் இவ்வளவு இடம் வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கேட்கும். ஆனால் அதை முடிவு செய்யும் அதிகாரம் அதிமுகவிடம்தான் உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகள் ஆகியோர் தான் இதை முடிவு செய்வார்கள். அது மட்டும் இன்றி அதற்கென்று குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் பரஸ்பரம் கூட்டணிக்கட்சிகள் தோழமைக் கட்சிகள் அங்கம் வகிக்கும். அதனால் தென்சென்னை குறித்து சொல்வதற்கு இப்போது சரியான தருணம் இல்லை. தேர்தல் வரும் போதுதான் அவர்கள் கொடுக்கும் புரோபசல்களை வைத்து அந்த நேரத்தில் கட்சி முடிவு செய்யும். காலம் காலமாக என்ன நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறதோ அதேயே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பின்பற்றுவோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அந்த நடைமுறை பின்பற்றப்படும். புதுசா எந்த வரையறையும் பின்பற்ற எந்த வழியும் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வருவதும் பிரதமர் வருவது என்பதும் நல்ல விஷயமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். நிறைய தொகுதிகளை கேக்க வேண்டும் என்ற எண்னம் கூட்டணி கட்சிகளுக்கு இருக்கும். ஆனால் அதிமுக மிகப்பெரிய இயக்கம். 2 கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக அதிமுக உருவெடுத்துள்ளது. எங்க கட்சியினரை நாங்கள் திருப்தி படுத்த வேண்டும். எங்கள் கட்சி தோழர்களை நாங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்ற வகையிலும், கட்சியின் நலன் பாதிக்காத வகையில்தான் நிச்சயமாக எந்த முடிவுகளும் இருக்கும். தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும் கூடுதல் இடங்களை கேட்பது அவர்களின் உரிமை. அதேவேளையில், அவர்கள் கேட்கும் இடங்களை கொடுக்க முடியுமா? என்பது எங்களின் கட்சி நலனை பாதிக்காத வகையில் தான் எங்கள் முடிவு இருக்கும். எனவே இப்போது எதையும் முடிவு செய்ய முடியாது. கூற முடியாது. அது அவர்களுக்கே (பாஜக) நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.