கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படிக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல் நலனை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களை படிக்க வேண்டும் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

ஆளுநர் மட்டும் இன்றி பிரபலமான மகப்பேறு மருத்துவராக அறியப்படும் தமிழிசையின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கவனம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரரஜன் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பதை பார்த்து இருக்கிறோம். குறிப்பாக தமிழகத்தில் கர்ப்பணி பெண்கள் கம்ப ராமாயணத்தின் உள்ள சுந்தரகாண்டத்தை படிக்க வேண்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வதும் உள்ளது. யோகா செய்வதன் மூலம் கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை என இருவரின் உடல் மற்றும் மன நலனைக் கவனித்து இறுதியில் சுக பிரவசத்திற்கு உதவிகரமாக இருக்கும். பேறு காலத்தில் ஏற்படும் சில சிக்கல்களை அறிவியல் பூர்வமான அணுகுமுறை கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.