பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் உயிரிழந்தார்!

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவருக்கு துணைநடிகர் கதாபாத்திரத்தைவிட வில்லன் ரோல் பக்காவாக பொருந்தி இருக்கும். அந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்கக்கூடியவர். நடிகர் கசான் கான் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், 1992ல் வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. அதன் பிறகே மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் இவரை தேடி வந்தன.

நடிகர் கசான் கான் வேடன், சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, உள்ளத்தை அள்ளித்தா, வல்லரசு, டூயட், முறைமாமன், பத்ரி,பிரியமானவளே, நரசிம்மா என 1990களில் வெளிவந்த முக்கிய படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய்காந்துடன் பல படங்களில் நடித்த இவர், பெரும்பாலம் பாகிஸ்தான் தீவிரவாதியாக நடித்திருந்தார். சேதுபதி ஐபிஎஸ் படத்தில் சாத்து நடை சாத்து என்ற பாடலுக்கு மீனாவுடன் இணைந்து கலக்கலாக நடனம் ஆடி இருப்பார். நடிகர் கசான் கடைசியாக தமிழில் பட்டைய கிளப்பு படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு வராததால் மலையாள திரைப்படத்தில் நடித்து வந்தார். மலையாளத்தில் இவர் கடைசியாக லைலா ஓ லைலா படத்தில் நடித்திருந்தார். அதன்பின் படவாய்ப்பு இல்லாததால் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கசான் கான் கடந்த 9ந் தேதியே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக, மலையாள சினிமா தயாரிப்பாளர் என்எம்.பாதுஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.