டுவிட்டர் நிறுவனத்திற்கு பாஜக அரசு மிரட்டல் விடுத்தது ஜனநாயகப் படுகொலை: காங்கிரஸ்

டுவிட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம்; ரெய்டு நடத்துவோம் என மத்திய பாஜக அரசு மிரட்டல் விடுத்தது ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி மத்திய பாஜக அரசு மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளில் ஓராண்டாக விவசாயிகள் கடும் வெயில், வாட்டும் குளிர், பனியில் உயிரை கொடுத்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களில் 800க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். இந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற காலத்தில், விவசாயிகள் போராட்டங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய டுவிட்டர் கணக்குகள், விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து மத்திய அரசை விமர்சிக்கும் டுவிட்டர் கணக்குகள் உள்ளிட்டவைகளை முடக்கித்தான் ஆக வேண்டும் என மத்திய பாஜக அரசு கடும் நெருக்கடி தந்தது. அப்ப்டி செய்யாமல் போனால், டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகம் மூடப்படும்; டுவிட்டர் நிர்வாகிகளின் வீடுகளில் ரெய்டுகள் நடக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி பகிரங்க குற்றச்சாட்டுகளாகத் தெரிவித்திருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஜேக் டோர்சியின் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ், மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளம், டிஜிட்டல் ஊடகங்களுக்கான பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, மத்திய பாஜக அரசின் செயலை ஜனநாயகப் படுகொலை என கண்டித்துள்ளார். இந்தியா ஜனநாயகத்தின் தாய்; இங்குதான் ஜனநாயகமே படுகொலை செய்யப்பட்டுள்ளது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓராண்டு காலம் விவசாயிகள் மழையிலும் பனியிலும் குளிரிலும் போராடிய போது காலிஸ்தானிகள், பாகிஸ்தானிகள், பயங்கரவாதிகள் என டுவிட்டரில் விமர்சிக்கப்பட்டனர். அப்படி போராடிய விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தினால், உலகத்துக்கு காட்டினால் ரெய்டு நடத்துவோம்; அலுவலகத்தை மூடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளது மத்திய பாஜக அரசு என்றார் சுப்ரியா ஸ்ரீநாதே.

அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா, டுவிட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பகிரங்கமாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி அரசாங்கம் வெளிப்படையான பதில்களைத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.