டாஸ்மாக் மதுவில் சயனைடு கலந்தது எப்படி?: அன்புமணி ராமதாஸ்!

டாஸ்மாக் மதுவில் சயனைடு கலந்தது குறித்து விசாரிக்க உயர்நிலை விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்ததற்கு காரணம் மதுவில் சயனைடு கலந்ததுதான் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் இரும்புப்பட்டறை நடத்தி வரும் பழனி குருநாதன், அதில் பணியாற்றி வரும் அவரது நண்பரான பூராசாமி ஆகிய இருவரும் மது குடித்த நிலையில் இறந்த பிறகு உயிரிழந்து கிடந்ததற்கு அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மங்கைநல்லூரில் மது அருந்திய பின்னர் உயிரிழந்த இருவரும் நண்பர்கள், அவர்களுக்கு குடும்பத்திலோ, தொழிலோ எந்த பிரச்சினையும் கிடையாது; அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதனால், அவர்கள் மதுவில் சயனைடு கலந்து தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்களில் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அத்தகைய சூழலில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்தது எப்படி? ஒருவேளை அவர்களே கலந்ததாக வைத்துக் கொண்டால், சயனைடு அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? கொடிய நஞ்சான சயனைடு விரும்பியவர்கள், விரும்பிய நேரத்தில் கிடைப்பதை அரசு அனுமதிக்கிறதா?.

தஞ்சாவூரில் கடந்த மே 21-ஆம் நாள் மதுக்கடை ஒன்றில் மது அருந்தி உயிரிழந்த இருவர் உயிரிழந்ததற்கு, அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டு இருந்தது தான் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுகுறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. அதன்பின் இன்று வரை 24 நாட்கள் ஆகியும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுவில் சயனைடு எவ்வாறு கலந்தது? என்பதற்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. இப்போது அதே முறையில் மயிலாடுதுறையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அப்படியானால் டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுவிலேயே நஞ்சு கலந்திருந்ததா? என்ற ஐயம் எழுகிறது. அதைப் போக்க வேண்டியது அரசின் கடமை.

தமிழ்நாட்டில் மது அருந்தி மக்கள் உயிரிழப்பது தொடர்வதும், மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று கூறி விட்டு அரசு கடந்து செல்வதும் கவலை அளிக்கிறது. இது தொடர்பான மக்களின் ஐயங்களைப் போக்க உயர்நிலை விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.