ஒருவர் செய்த அனைத்து தீமைகளும் இறந்துவிட்டார் என்பதாலேயே புனிதமாகிவிடாது என்று, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் ஊழல் செய்து உள்ளன. தமிழ்நாட்டில் நடந்த அனைத்துமே ஊழல் ஆட்சிதான். மக்களின் பணத்தை வைத்து முறைகேடு செய்த அனைத்து கட்சிகளையும் நான் சொல்கிறேன். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். முன்னாள் முதலமைச்சரே ஊழல் செய்த காரணத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்.” என்று பேசினார். ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கை சுட்டிக்காட்டியே அண்ணாமலை இவ்வாறு பேசியதாக அதிமுகவினர் அவரை கடுமையாக சாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்து உள்ளார்.
செய்தியாளர்: நேற்று அண்ணாமலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி தவறாக பேசியதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சீமான்: தவறாக என்ன சொன்னார் சொல்லுங்கள்?
செய்தியாளர்: தவறான கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.
சீமான்: தவறான கருத்து என்றால் என்னவென்று சொல்லுங்கள் எனக்கு?
செய்தியாளர்: ஊழல் குற்றவாளி என்பதைபோல் சொல்லி இருக்கிறார்.
சீமான்: எதற்காக சிறைக்கு போனார்?
செய்தியாளர்: நீதிமன்றம்தான் இறந்த பிறகு சொல்லவில்லையே?
சீமான்: சரி, சசிகலாவை எதற்கு உள்ளே வைத்தார்கள்?
செய்தியாளர்: அவர்கள் ஆட்சியில் இல்லை.
சீமான்: ஆட்சியில் இல்லாதவர்கள் மீதே நீங்கள் வழக்குபோட்டு உள்ளே 4 வருசம் வைத்தீர்களே. ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? அதையே பேசிக்கொண்டு இருக்க வேண்டியது கிடையாது.
செய்தியாளர்: அப்படியென்றால் அவர் சொன்ன கருத்து சரிதான் என்கிறீர்களா?
சீமான்: எதுக்கு சிறைக்கு போனார்கள்? அதை சொல்லுங்கள்.
செய்தியாளர்: பழிவாங்கும் நடவடிக்கையில் போட்ட வழக்கு. வேறு மாநிலத்தில், கர்நாடகாவில் விசாரிக்கப்பட்ட வழக்கு.
சீமான்: ஒருவர் செய்த அனைத்து தீமைகளும் இறந்துவிட்டார் என்பதாலேயே புனிதமாகிவிடாது. அதைபோல் பேசிக்கொண்டு இருக்க வேண்டியது கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.