மது அருந்திய இருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், அவர்கள் சைனைடு கலந்து படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியை சேர்ந்தவர் பழனி குருநாதன் (வயது 55). மங்கைநல்லூர் பகுதியில் இவர் நடத்தி வரும் இரும்புப் பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (வயது 65) என்பவர் பணியாற்றி வந்து இருக்கிறார். இருவரும் வழக்கம்போல் நேற்று மாலை 5 மணி வரை பட்டறையில் வேலை செய்த நிலையில், திடீரென மயங்கி நிலையில் விழுந்து இருக்கின்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் மயங்கி விழுந்த இரும்பு பட்டரைக்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கு 2 டாஸ்மாக் பாட்டில்கள் கிடந்து இருக்கின்றன. ஒரு பாட்டிலில் பாதி அளவு மது இருந்துள்ளது. மற்றொரு பாட்டில் திறக்கப்படாமல் கிடந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மது அருந்தியதாலேயே இருவரும் உயிரிழந்ததாக காட்டுத்தீபோல் தகவல் பரவியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இருவரும் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டு இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை உறுதிபடுத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சிய மகாபாரதி, இது குறித்து கூடுதல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த மதுவில் சையனைடு கலந்து இருவரும் கொல்லப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
திருச்சியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருந்து அறிக்கை கிடைத்து உள்ளது. அதில் சையனைடு இரத்தத்திலும், உள் உறுப்புகளிலும் கலந்திருப்பதை கண்டுபிடித்து உள்ளார்கள். மெத்தனால் எதுவும் இல்லை. எதில் ஆல்கஹால் கலந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த தகவலை வைத்து கொலை என்று முடிவுக்கு வந்து உள்ளோம்.” என்றார்.
இதற்கிடையே மதுவில் சையனைடு கலந்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மனோகரன், பாஸ்கரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிக்கை வெளியிட்டு உள்ளார். கைதான இருவருமே உயிரிழந்த பழனி குருனாதனின் சகோதரர்கள். இருவரிடம் விசாரணை மேற்கொண்ட பின் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.