பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள் அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப திட்டம்!

அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிவிப்பில், “பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா: மோடிக்கான கேள்வி’ என்ற ஆவணப்படம், வரும் 20ம் தேதி அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.