செந்தில் பாலாஜிக்கு ரூ. 25 கோடி பினாமி சொத்துகள்: அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு ரூபாய் 25 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தி பல கேள்விகளை கேட்டு அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. எதற்காக கைது செய்தார்கள் அதற்கான அவசியம் என்ன என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

செந்தில் பாலாஜிக்கு இன்றும்(நேற்று) சம்மன் அனுப்பப்பட்டும் அவர், வாங்க மறுத்துவிட்டார். செந்தில் பாலாஜி வங்கிக்கணக்கில் ரூபாய் 1.34 கோடி இருந்தது. செந்தில் பாலாஜி மனைவியின் பெயரில் ரூபாய் 29.55 லட்சம் இருந்தது. வங்கிக்கணக்கில் இருந்த பணம் வருமான வரி கணக்கிற்கு முரண்பாடாக இருந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் விசாரணைக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கவில்லை. குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே கைது நடவடிக்கையை மேற்கொண்டோம். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம் ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அதை பெற மறுத்துவிட்டனர். செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும்பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால் பி.எம்.எல்.ஏ சட்டத்தின் அடிப்படையிலும், விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு ரூபாய் 25 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பினாமி நிலம் வாங்குவதற்கு செந்தில் பாலாஜி பயன்படுத்தி இருக்கலாம். சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காததுமே கைதுக்கு காரணமாகும். இவ்வாறு அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.