செந்தில் பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணை கைதிக்கான பதிவேடு எண் 001440 வழங்கப்பட்டுள்ளது எனபுழல் சிறைத் துறை தெரிவித்துள்ளது.

நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவரிடம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நேரடியாக மருத்துவமனைக்கே வந்து விசாரணை நடத்தினார். அப்போது செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி சார்பில் இரு மனுக்களும் அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நேற்று இரு தரப்பு வாதங்கள் நடந்தன. அதில் கைது வாரண்டு குறித்த மெமோ செந்தில் பாலாஜிக்கு அனுப்பியும் அவர் அதை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த மனுக்கள் மீது இன்றைய தினம் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய மனு ஆகிய இரு மனுக்களும் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் துணை ராணுவ படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர். செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டை புழல் சிறைத்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணை கைதிக்கான பதிவேடு எண் 001440 வழங்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேடு எண், அவர்களுக்கான விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள்.