பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த நிலையில், சில பயிற்ச்சியாளர்கள் மற்றும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியில் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தபோது வீரர்கள் அதை மறுத்துவிட்டனர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடிய பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினர். இந்த முறை அரசியல் அமைப்புகளின் ஆதரவை வீரர்கள் நாடினர். மேலும், விவசாய சங்கங்களும் வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இந்நிலையில் கடந்த 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் மறுத்துவிட்டது. இது போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்டுத்தியது. இதனையடுத்து பிரிஜ் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள்/வீராங்கனைகள் அறிவித்தனர். அதன்படி கங்கை நதி கரைக்கு வந்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினர், வீரர்களின் பிரச்னையை தீர்க்க தாங்களும் போராட்டம் நடத்துவதாகவும், எனவே பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் எனவும் கூறி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இப்பிரச்னைக்கு 5 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். அதேபோல, சர்வதேச மல்யுத்த அமைப்பு மற்றும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் ஜூன் 15ம் தேதி பிரிஜ் பூஷன் மழுது பதிந்துள்ள வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து டெல்லி போலீஸ் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. இதில், சிறுமி அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்றும் டெல்லி போலீஸ் கூறியுள்ளது.