எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா?: அண்ணாமலை!

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள போதே எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா? என முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயகப் படுகொலை எனக் கொந்தளிக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர்தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார் எனத் தெரிவித்து, ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரிய விஷயங்களை லிஸ்ட் போட்டுள்ளார் அண்ணாமலை.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள், குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம்சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள போதே எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா?

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை முகலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு சிபிஐ விசாரணை கோரினீர்கள். பிப்ரவரி 2015 ல், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் மேல் சிபிஐ விசாரணை கேட்டீர்கள். மே 2016ல், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றீர்கள். அரவக்குறிச்சியில் இதே செந்தில் பாலாஜி அவர்களின் மீதுதான் குற்றச்சாட்டும் வைத்தீர்கள். டிசம்பர் 2017, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சிபிஐ விசாரணை கோரினீர்கள். 2018 ஏப்ரல் – குட்கா விற்பனையில் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை. 2018 மே – குரூப் 1 தேர்வு முறைகேடுகளில் சிபிஐ விசாரணை கோரிக்கை வைத்தீர்கள்.

2018 ஜூலை – அன்றைய அமைச்சர்கள் மேல் சிபிஐ விசாரணை கோரிக்கை, கனிம மணல் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை வைத்தீர்கள். 2018 ஆகஸ்ட் – தமிழக மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை வைத்தீர்கள். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை. 2018 செப்டம்பர் – ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை. மார்ச் 2019 – பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை ஜூன் 2019 – அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ விசாரணை கோரிக்கை.

செப்டம்பர் 2019 – ஆர்கே நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை. அக்டோபர் 2019 – நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை. ஜூன் 2020 – தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கேட்போம் என்ற அறிவிப்பு. செப்டம்பர் 2020 – பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில், தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சிபிஐ விசாரணை கோரிக்கைகள்? நீங்கள் இப்போது ஆளும் கட்சி ஆனபின்பு சிபிஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.