ஊழலை பற்றி பேச பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவுக்கு தகுதியில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த வேளையில் போக்குவரத்து துறையில் பணி தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாக கூறி வழக்கு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பான புகாரில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கொண்டு மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அமலாக்கத்துறையின் செயல்பாடு என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல் உள்ளதாகவும் கூறி விமர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் வீடியோ பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி சீமான் கூறியதாவது:-
திமுகவுக்கு எதிராக வலைதளங்களில் பதிவு செய்தால் வழக்குப்பதிவு செய்வார்கள். அப்போது ஜனநாயகம் உள்ளது. ஆனால் திமுகவினர் பாதிக்கப்படும்போது இது ஜனநாயகமாக? என கேள்வி கேட்கின்றனர். அதோடு அத்துமீறல், பழிவாங்கல் என கூறுகின்றனர். டுவிட்டரில் மீம் பேட்டால் குண்டாஸ் போடுகிறார்கள். என் தம்பி துரை முருகன் பேசியதற்காகவே அவர் மீது குண்டாஸ் போடப்பட்டது. இதனை எல்லாம் யோசித்து பார்க்க வேண்டும். மேலும் அப்போது எல்லாம் இல்லாத ஜனநாயகம், கருத்து சுதந்திரம் இப்போது வருகிறதா? இது எல்லாம் கொடுமை தான்” என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அமைச்சர் செந்தில் பாலாஜியை அனைவரும் பார்க்க நேராக சென்றனர். கனிமொழி எம்பியை கூட பார்க்க இவ்வளவு பேர் செல்லவில்லையே?” என கேள்வி கேட்டார். இதற்கு சீமான், ‛‛அடுத்து என்ன நம்ம வீட்டுக்கு வந்து விடுவார்களோ என்ற பயம் தான் செந்தில் பாலாஜியை போய் அனைவரும் பார்க்கின்றனர். கனிமொழியை கைது செய்யும்போது வருவாய் கொழிக்கும் இலாக்கள் அவரிடம் இல்லை. இப்போது செந்தில் பாலாஜியிடம் உள்ளது. அதனால் பார்க்கிறார்கள்” என்றார்.
இதன் தொடர்ச்சியாக, ‛‛திமுகவின் செலவுக்கு பணம் கொடுப்பது எல்லாம் செந்தில் பாலாஜி என சொல்கிறார்களே” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு சீமான், ‛‛வாய்ப்பு இருக்கலாம். ஏனென்றால்ல் அவர் வைத்திருக்கும் துறைகளில் பணம் கொழிக்கிறது. இதனால் தான் சிறந்த வசூலிப்பவராக உள்ளார். அதிமுக ஆட்சியில் வசூலிப்பை சிறப்பதாக செய்ததால் இந்த ஆட்சியிலும் முக்கிய துறைகளை அவரிடம் கொடுத்துள்ளனர்” என்றார்.
இதையடுத்து, ‛‛தற்போதைய நடவடிக்கை என்பது பாஜகவினர் பழிவாங்கும் படலம் என கூறுகின்றனரே?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சீமான், ‛‛ஊழலை பற்றி பேச பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவுக்கு தகுதியில்லை. ஊழல் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கிறது. நான் பேசலாம். பாஜகவில் கர்நாடகாவில் தோற்றதுக்கு 40 சதவீதம் கமிஷன் தான் காரணம். மகாராஷ்டிராவில் 40 எம்எல்ஏக்களை வாங்கினார்கள். ஒருவருக்கு ரூ.130 கோடி கொடுத்தனர். ரபேலில் போர் விமானம் ஊழல் குற்றச்சாட்டில் விளக்கம் அளிக்கவில்லை. தங்கள் வசம் வருமான வரி, அமலாக்கத்துறை இருப்பதால் தற்போது பாஜகவினர் பழிவாங்குகின்றனர். ஜெயலலிதா அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலில் இவ்வளவு காலம் விட்டுவிட்டு இப்போது நடவடிக்கை எடுத்தது தான் கேள்வியாக இருக்கிறது” என்றார்.