செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஏன் தயக்கம்?: சசிகலா

கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதற்கு திமுக தலைமைக்கு என்ன தயக்கம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சசிகலா.

அமலாக்கத் துறை கடந்த 13ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தியது. தொடர்ந்து, அன்று நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, ஓமந்தூரார் மருத்துவமனை வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, அவரை பார்த்துவிட்டு சென்றார். அதன்பின், செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தக் குழாய்களில் அடைப்புஇருப்பதால், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம்இரவு செந்தில் பாலாஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளில் மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை, அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதேசமயம், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவெடுத்து இதுகுறித்து ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், பரிந்துரையை ஆளுநர் நேற்று முன்தினம் இரவு திருப்பி அனுப்பியதுடன், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்து விளக்கம் கோரினார். அதன்பின், நேற்று முன்தினம் இரவே , மீண்டும் பரிந்துரைக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலாகா மாற்றத்தை ஆளுநர் ஏற்று இருந்தாலும், செந்தில் பாலாஜி குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதால் தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிப்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், அமைச்சரவைய்ல் செந்தில் பாலாஜி நீடிப்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை அரசியலாக்காமல் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அன்று இரவு அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் அதிர்ச்சியில் மீள முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள், பேட்டிகள், தன்னிலை விளக்கங்கள் மூலம் தமிழக மக்களால் நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது. திமுக அமைச்சரின் கைது நடவடிக்கையால் அரசுப் பணிகள் எதுவுமே சரியாக நடைபெறாமல் அரசு இயந்திரமே இன்றைக்கு ஸ்தம்பித்து போய் இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.

அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் ஏன் ஒரு அமைச்சராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா தயங்கியதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று திமுக தலைமையோ கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு யார் காரணம்? வேறு ஏதேனும் நெருக்கடிகள் இருக்கிறதா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.