தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் அவர், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து பதிவு செய்துவருபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து டுவிட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ என எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். மேலும், “எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியைப் போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே” என சு.வெங்கடேசனை விமர்சித்திருந்தார் எஸ்.ஜி.சூர்யா.
இந்த விவகாரம் குறித்து சிபிஐஎம் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி சூர்யாவை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரித்த பின்னர் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் சூர்யாவை கைது செய்ததை அறிந்த பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் திடீரென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.