விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி: என்ஐஏ குற்றப்பத்திரிகை!

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் செயல்பட்டதாக என்ஐஏவால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 13 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கை தமிழர்கள் உள்பட ஏராளமானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தமிழகத்தில் இருந்தபடி இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டமைக்கும் நோக்கத்தில் சிலர் செயல்படுவதாக தேசிய புலனாய்வு முகமைவுக்கு(என்ஐஏ) தகவல் கிடைத்தது. இதற்காக பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்கள் வாங்கி விற்பனை செய்து நிதி திரட்டப்படுவதாகவும், இதன்மூலம் இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள் வாங்க முயற்சிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

என்ஐஏ விசாரணையைத் தொடர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த செல்வகுமார், விக்னேஷ்வர பெருமாள் என்ற விக்கி, ஐயப்பன் நந்து ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இலங்கையை சேர்ந்த குணசேகர் என்ற குணா, புஷ்பராஜ் என்ற பூகூட்டி கண்ணா, முகமது அஸ்மின், அழகபெருமக சுனில் ஞாமினி பொன்சீகா, ஸ்டேன்லி கென்னடி பெர்ணாண்டோ, தனுகா ரோஷன், லாடியா என்ற நளின் சதுரங்கா, வெள்ளா சுரங்கா என்ற காமேஸ் சுரங்கா பிரதீப், திலீலன், தனரத்னம் நிலுக்சான் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில் தான் என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கைதான 13 பேரும் இந்தியா, இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. இதற்காக ஆயுதம் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்து கிடைக்கும் பணம் மூலம் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் வாங்க முயற்சித்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்பவரிடம் இருந்து போதைப்பொருட்கள் கிடைத்துள்ளது. இத்தகைய சட்டவிரோத செயல்களுக்காக அவர்கள் வெவ்வேறு வெளிநாடு வாட்ஸ்அப் எண்களைபயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் கைதானவர்களிடம் இருந்து செல்போன், போதைப்பொருள் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர ரூ.80 லட்சம், 9 தங்கக்கட்டிகளும் சிக்கின. இந்த ரொக்கம் மற்றும் தங்கக்கட்டிகள் என்பவை போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்தவையாகும். மேலும் இந்த பணம் சென்னை மற்றும் இலங்கை இடையேயான ஹவாலா நெட்வொர்க் கும்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் கிரிப்டோ கரன்சிகளையும் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்பன போன்ற விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.