மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் அங்கு நடக்கும் பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விளையாட்டு துறை அமைச்சராக மாற்ற வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதையடுத்து மீண்டும் பாஜக முதல்வராக பிரேன் சிங் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தமட்டில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்நிலையில் தான் இனக்குழுவினருக்கு இடையேயான பிரச்சனை தான் வன்முறையாக வெடித்து தொடர்ந்து வருகிறது. அதாவது மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதல் தான் தற்போது அந்த மாநிலத்தையே கலவரக்காடாக மாற்றி உள்ளது. குக்கி இனக்குழுவினரைப் போல தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி குழுவினர் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் மைத்தேயி-குக்கி இனக்குழுவினர் தொடர்ந்து மோதுவதால் வன்முறை கட்டுப்படுத்த முடியாமல் நீடித்து கொண்டே செல்கிறது. ஆயுதங்களை ஏந்தி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. வழிப்பாட்டு தலங்கள், வீடுகள், கடைகளுக்கு தீவைக்கப்பட்டு வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. இதற்கிடையே தான் சில நாட்களாக வன்முறையில் போக்கு வேறு திசைக்கு மாறியுள்ளது. அதாவது மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து தீவைக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீவைக்கப்பட்டது. அதேபோல் மணிப்பூர் அரசின் அமைச்சரான நெம்சா கிப்ஜென்னின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படாவிட்டாலும் கூட பொருட்சேதம் உருவானது. அதோடு மணிப்பூரில் மத்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து குவிக்கப்பட்டாலும் கூட பதற்றம் மட்டும் குறையவேயில்லை.
இந்நிலையில் தான் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜகவை அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்பின் 356வது சட்டப்பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை கொண்டு வர வேண்டும். அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்” என கடுமையாக சாடியுள்ளார்.
அதாவது மணிப்பூர் வன்முறையை மத்திய உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு அமித்ஷா கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். இதனால் அங்குள்ள பாஜக அரசை கலைக்க வேண்டும். அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தை நிர்வகிக்க முடியாத அமித்ஷாவுக்கு விளையாட்டு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.