தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களுக்கு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதில் இந்த கூட்டத்தில் ஐந்து முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொதுக்குழு நடந்து முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஐந்து நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அந்த நடிகர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்ட போது, முதற்கட்டமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் ஒதுக்காமல் நஷ்டம் ஏற்படுத்தி கொடுத்த ஐந்து நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்திற்கு அனுப்பப்படும். மீண்டும் அந்த நடிகர்கள் பழைய நிலையை தொடர்ந்தால் அவர்களின் பெயர் பொது வெளியில் வெளியிடப்பட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் படம் எடுப்பதையும் தயாரிப்பாளர் சங்கம் தவிர்த்து விடும் என்றும் அவர்களுக்கு ரெட் கார்டு விதிக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட ஐந்து நடிகர்களுக்கு தான் ரெட் கார்டு வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிறுவனத்துடன் முன் பணம் பெற்று கால்ஷீட் வழங்காமல் தற்போது கமல் தயாரிப்பில் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல், மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலுவிடம் முன் பணம் பெற்று அவரின் படத்தில் நடிக்காத விஷால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஜே. சூர்யா, பல தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் யோகி பாபு ஆகியோருக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.