அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் திமுக கட்சி உள்பட 60 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாதம் மாதம் செந்தில் பாலாஜி பணம் கொடுக்கிறார் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் 60 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் செந்தில்பாலாஜி விசாரணையில் வாய்திறந்தால் தனக்கு ஆபத்து ஏற்படுத்தும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தி செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் திமுக கட்சி உள்பட 60 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாதம் மாதம் செந்தில் பாலாஜி பணம் கொடுக்கிறார். செந்தில் பாலாஜி விசாரணையின் போது வாய் திறந்தால் முதல்வர் உள்பட பலருக்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சத்தால் இதில் தமிழக அரசு வேகம் காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் மூலமாக பெற்ற பணத்தை எப்படி பிரித்துக் கொடுத்தார் என்பது வெளிவரும். இதனால், முதல்வர் மு.க ஸ்டாலின் அச்சப்படுகிறார்.
நான் பேசுவதை தான் விஜய் பேசி வருகிறார். எனவே விஜய் பேச்சு எங்களுக்கு வலு சேர்க்கும். வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் உருவாகிறது. காசு கொடுத்து வாக்கு பெற்ற எந்த அரசியல்வாதிக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தும் எண்ணம் வராது. தம்பி விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எனவே, அவர் வேறு நான் வேறு இல்லை. எங்களுக்குள் இருக்கும் பந்தம் அண்ணன் தம்பி மட்டும் தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.