நடிகை குஷ்பு பற்றி முகம் சுளிக்கும் வகையிலும் அவதூறாகவும் மேடையில் திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் திமுகவில் இருந்து நிரந்தரமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.
திமுக பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியிருந்தார். இதையடுத்து அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வழக்கம்போல் பேச்சை தொடர்ந்தார். இதற்கிடையே தான் சமீபத்தில் சென்னையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது நடிகையும், பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பற்றி அவர் பேசிய வார்த்தைகள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
குறிப்பாக நேற்று சென்னையில் நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கண்கலங்கியபடி, ‛‛பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும்” என காட்டமாக சாடினார்.
இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். குஷ்பு பிரஸ்மீட்டில் கண்கலங்கிய நிலையில் அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தன. அதன்படி குஷ்பு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சென்னை புளியந்தோப்பு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்யும் பணியையும் தொடங்கினர். அதன்படி கொடுங்கையூர் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.