இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன்பாக நடித்ததில்லை: காஜல் அகர்வால்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படம் குறித்து நடிகை காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன்பாக நடித்ததில்லை என்று காஜல் கூறியுள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘இந்தியன் 2’. நீண்ட காலமாக ஷங்கர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாகவே ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடந்து வந்த வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஷுட்டிங் நடந்த சமயத்தில் அங்கிருந்த கிரேன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஏற்பட்ட கொரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கமலும், ஷங்கரும் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியானார்கள். இதனால் லைகா நிறுவனம் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து பலக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு படு ஜோராக நடந்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தையும், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் காஜல் அகர்வாலும் நடித்து வருகிறார். இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் நடித்து வரும் தெலுங்கு படமான சத்தியபாமாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காஜல் அகர்வால் பிறந்தநாளை தொடர்ந்து வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது ‘இந்தியன் 2’ படம் குறித்து பேசிய அவர், தனக்கு இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டர் என்றும், இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன்பாக நடித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘இந்தியன் 2’ படம் குறித்து இதற்கு மேல் ஏதாவது கூறினால் படக்குழுவினர் தன்னை கொன்றுவிடுவர்கள் என்றும் கலகலப்பாக பேசியுள்ளார் காஜல் அகர்வால்.